‘நெடுநல்வாடை’ திரைப்பட விமர்சனம்!

PMV_4948 201903141506066044_Nedunalvadai-Movie-Preview_SECVPFசெல்வ கண்ணன் இயக்கத்தில் பூ ராமு, இளங்கோ, எல்விஸ் அலெக் சாண்டர், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நெடுநல்வாடை’

இதுவரையில் அப்பா மகனுக்கும், அம்மா மகளுக்கும் நடக்கும் பாச போராட்ட்த்தைப்பற்றி நிறைய கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் தாத்தா-பேரன் பற்றிய கதை அதிகமாக வந்ததில்லை. தற்போது வெளி வந்திருக்கும் ’நெடுநல்வாடை’ படத்தின் கதை, ஒரு தாத்தாவுக்கும், தன் மகள் வயிற்று பேரனுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தைப்பற்றியும், ஒரு கிராமத்தில் நடக்கும் காதலை மையமாக வைத்து,  ஒரு அருமையான கிராமத்து கதையை  இயக்குனர் செல்வகண்ணன் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. தமிழில் எத்தனையோ படங்கள் வந்தாலும் ஒரு சில படங்கள்தான் மக்கள் மனதில் நிலைக்கின்ற மாதிரி வரும். அப்படி ரசிகர்கள் வரவேற்கின்ற அளவிற்க்கு ’நெடுநல்வாடை’ படம் அமையும் என்பதில் ஐயமில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பூ ராமுவுக்கு மைம் கோபி, செந்திகுமாரி என 2 பிள்ளைகள். தன் தந்தைக்கு தெரியாமல், காதல் திருமணம் செய்துகொண்டு ஊரைவிட்டு ஓடிப் போகும் செந்திகுமாரி கணவனின் தொல்லை தாங்காமல் மகன் இளங்கோ மற்றும் மகளுடன் தனது தந்தை வீட்டுக்கு வந்து விடுகிறார்.

ஆனால், தன் கூட பிறந்த அண்ணன் மைம் கோபி அவர்களை சேர்த்துக்கொள்ள மறுத்து, வெளியில் துரத்த, மகனுடன் மல்லுக் கட்டும் பூ ராம், தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு அடைக் கலம் தருகிறார். பேரன், பேத்தி இருவரையும் நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வர பாடுபடுகிறார். இந்த சூழ்நிலையில் சிறுவயது முதல் ஒன்றாக பழகி வரும் இளங்கோவும், அஞ்சலி நாயரும் காதலிக்கிறார்கள். இதனால் வேதனையடைந்த பூ ராமு தனக்கு பிறகு குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் அளவுக்கு இளங்கோ பக்குவப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

பேரன் இளங்கோவிடம் தாய் மாமன் மைம்கோபியின் கொடூர குணத்தைப் ப்ற்றி சொல்லி, எதிர்காலத்தில் அம்மாவையும், தங்கையையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால்,  நல்ல நிலைக்கு வர வேண்டும் என புத்திமதி சொல்கிறார். தாத்தாவின் பேச்சை கேட்டு காதலை கை கழுவும் இளங்கோ, காதலே வேண்டாம் என ஒதுங்கி விடுகிறார். ஆனாலும் தன் காதல் பிரிவின் வலியை தாங்க முடியாமல் தவிக்கிறார் இளங்கோ. பேரன் மனம் வேதனையுடன் தவிப்பதை கண்டு, தாத்தா பூ ராம், அவனது காதலியுடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார். தாத்தாவின் முயற்சியால் இளங்கோவின் காதல் வென்றதா? அவரது காதலியை கரம் பிடித்தாரா? அல்லது குடும்பத்திற்காக காதலை தியாகம் செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பூ ராமுவுக்கு தன் மகளின் குடும்பத்தையும் படத்தையும் தாங்கும் முக்கிய கதாபாத்திரம். படம் ஆரம்பித்தது முதல் கடைசி காட்சிகள் வரை ஒரு உணர்வுபூர்வமாக செல்லையா என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து அசத்தி விட்டார். அவர் ஹீரோவுக்கு தாத்தா என்றாலும், படத்தின் முக்கிய தூணாக இருந்து,  படம் முழுக்கவே நம் உணர்வுகளை தட்டி எழுப்பும் காட்சிகளில் சிறப்பாக நடித்து, நம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம்போல, அனைவரது மனதை ஒன்ற வைத்து விடுகிறார்.. இப்படத்தின் மூலம் இந்த ஆண்டு பல விருதுகள் பூ ராமுவிற்க்கு கிடைக்கும் என்பதில் ஐயமே இல்லை. தாத்தாவின் சொல்லை தட்டாத பேரனாக இந்த ஆண்டில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த புதுமுகமாக இளங்கோ கண்டிப்பாக ஜொலிப்பார்.

அஞ்சலி நாயரின் துறுதுறுப்பான நடிப்பு, புதுமுக நடிகை என்று சொல்லவே முடியாது. சின்ன சின்ன முகபாவனைகள் மூலம் தன் நடிப்பில் அசத்தி விடுகிறார்..அவரது முகத் தோற்றம்  ”கரகாட்டக்காரன்”  படத்தில் வரும் கனகாவை நினைவுபடுத்துகிறது. மற்ற நடிகைகள் மாதிரி வெறுமனே அழகு பொம்மையாக வந்து போகாமல் படத்தின் உயிர்நாடியாக நடித்து இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி நடிப்பில் அனைவரது கண்களிலிருந்து கண்ணீரை வர வைத்து விடுகிறார்.

தாய் மாமனாக நடித்திருக்கும் மைம்கோபி அனைவரும் வெறுக்கின்ற அளவிற்க்கு சிறப்பாக நடித்திருக்கிறார். தாயாக வரும் செந்திகுமாரி, அண்ணனாக அசத்தும் அஜய் நடராஜ், ஐந்து கோவிலான், ஞானம் என எல்லோருமே சிறப்பான முறையில் தங்களது ந்டிப்பை வெளிப்படுத்தி யுள்ளனர். எளிமையான கதையாக இருந்தாலும் புதுமுக நடிகர், நடிகைகளையும் கொண்டு இப்படத்தின் காட்சிகளை, கதையுடன் நம்மையும் ஒன்றிவிட செய்துவிடுகிறார் இயக்குனர் செல்வகண்ணன்.

ஜோஸ் பிராங்ளினின் இசை, வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு, மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு மூன்றும் செல்வகண்ணனின் எழுத்தை அப்படியே திரைக்கு கொண்டு வர உதவி இருக்கின்றன. வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் மிகவும் சிறப்பு.

மொத்தத்தில் `நெடுநல்வாடை’ படம் தமிழ் ரசிகர்களை கண்டிப்பாக கவரும்…திருப்திபடுத்தும்.

 BY

RADHAPANDIAN.

 

Share this post:

Related Posts

Comments are closed.