ஊர்வசியுடன் நடிக்க பயமாக இருந்தது. சரியாக வசனம் பேசி நடிக்க முடியவில்லை என்று நடிகை ஜோதிகா கூறுகிறார்!

DSC_4045 DSC_11721நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை ஜோதிகா, திருமணத்துக்குப்பின், சில வருடங்கள் சினிமாவில் நடிக்கவில்லை. கடந்த 2015-ம் ஆண்டில், அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். பெண்கள் பிரச்சினையை கருவாக கொண்ட ‘36 வயதினிலே’ என்ற படத்தில் அவர் கதாநாயகியாக நடித்தார். அதைத்தொடர்ந்து, ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா டைரக்‌ஷனில், ‘மகளிர் மட்டும்’ என்ற படத்தில், ஜோதிகா நடித்தார். படத்தில் அவருடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகிய மூன்று பேரும் இணைந்து நடித்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.

இதுபற்றி ஜோதிகா, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ஒரு மருமகள், தன்னுடைய மாமியாரையும், அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக் கொள்கிறார்? என்பதே ‘மகளிர் மட்டும்’ படத்தின் கதை. இந்த கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோருடன் இணைந்து நடிக்கும்போது, எனக்கு பயமாக இருந்தது.ஊர்வசியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். படத்தில், நான் மோட்டார்சைக்கிள் ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. எனக்கு 2 நாட்கள் மோட்டார்சைக்கிள் ஓட்ட சூர்யா பயிற்சி அளித்தார். அதன் பிறகு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷீபா என்ற பயிற்சியாளர் எனக்கு பயிற்சி அளித்தார். நான், என் மகள் தியாவை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்று பள்ளியில் விட்டபோது, அவளுக்கு பெருமையாக இருந்தது. மகன் தேவுக்கு சூர்யாதான் எப்போதும் ‘ஹீரோ.’ இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘நாச்சியார்’ படத்தின் மூலம் தேவுக்கு நான், ‘ஹீரோ’வாக தெரிவேன் என்று நம்புகிறேன்.

நான், தற்போது சூர்யாவுடன் தினமும் ‘ஜிம்’முக்கு சென்று வருகிறேன். என்னோடு நடித்த சக நடிகர்-நடிகைகளை விட, நான் 5 வயது இளமையாக தெரிவேன் என்று நம்புகிறேன். பெண் எழுத்தாளர்களுக்கு இப்போது யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இயக்குனர் சுதா கொங்கராவுக்கு மாதவன் வாய்ப்பு கொடுத்தது, நல்ல விஷயம். அவர் வாய்ப்பு கொடுத்ததால்தான் ‘இறுதிச்சுற்று’ என்று ஒரு நல்ல படம் வந்து வெற்றி பெற்றது. பெண்களை குறைவாக மதிப்பிடும் காலம் மாற வேண்டும். பெண் எழுத்தாளர்கள் யாரும் அறியாத கதாநாயகர்கள்.” இவ்வாறு ஜோதிகா கூறினார்.

Share this post:

Related Posts

Comments are closed.