அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா மிரட்டி கூட்டணிக்கு பணிய வைப்பதாக தி.மு.க. தலைவர். மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

stalin 201902151333248341_MK-Stalin-slams-BJP_SECVPFசின்ன காஞ்சிபுரம் திராவிட நாடு அலுவலக கட்டிடத்தின் முகப்பில் புதிதாக அமைக்கப்பட்ட அண்ணா, கருணாநிதி முழு உருவச் சிலைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடியில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் நகரச் செயலாளர் சன் பிராண்டு ஆறுமுகம் வரவேற்றார். கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

அறிஞர் அண்ணா பிறந்த ஊரில் அவர் பல்வேறு கட்டுரைகள் எழுதி தி.மு.க. வினை வளர்த்த இடத்தில் அவருடைய சிலையும், அவரது அன்பிற்கு என்றும் பாத்திரமாக இருந்து கழகத்தினை கட்டிக் காத்த கலைஞர் சிலையையும் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மத்தியில் மோடி தலைமையில் பாசிச ஆட்சி நடைபெற்று வருகின்றது. மத்தியில் இருந்து தமிழகத்திற்கு வரும் அவர்களுடைய சதியினை தகர்த்தெறிய வேண்டும். நதிகள் இணைக்கப்படவில்லை. அதி நவீன நகரத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தினை மீட்டு அனைவரது கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்றார் மோடி. ஆனால் 15 ரூபாய் கூட போடவில்லை. மோடியின் அனைத்து வாக்குறுதியும் பொய்.

ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என்று சொன்னார்கள். வெளிநாட்டு பெரு நிறுவனம் தனியார் துறைகளிடம் அத்திட்டம் தாரை வார்க்கப்படுகின்றது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மத்தியில் மன்னர் ஆட்சியும் மாநிலத்தில் கொத்தடிமை ஆட்சியும் நடைபெற்று வருகின்றது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.4 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளோம் என்கிறார்கள். ஆனால் 21 சதவீதம் உலக முதலீடு குறைந்துள்ளது என மத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. ஜி.எஸ்.டி. வரி ரூ.5454 கோடியினை மத்திய அரசிடம் கேட்டுப்பெற தமிழக அரசுக்கு திராணியில்லை.

தமிழகத்தை ஆள்பவர்கள் மக்கள் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் மோடியின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். சிறிய கட்சிகள் கூட பா.ஜனதாவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க.வை மிரட்டி கூட்டணிக்கு அடி பணிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நாட்டு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Share this post:

Related Posts

Comments are closed.