ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாட வேண்டும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வற்புறுத்தல்

201804280232576109_Against-AfghanistanTest-match-Viratkoli-Need-to-play_SECVPFஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வற்புறுத்தி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடுகிறது. இந்த ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் புஜாரா, இஷாந்த் ஷர்மா, அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளனர்.
கவுண்டி போட்டியில் ஆடுவதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட்கோலி நிச்சயம் விளையாட வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி இருக்கிறார்கள்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்வதேச போட்டியில் இருந்து விலகி, அதேநேரத்தில் கவுண்டி போட்டியில் ஆட அனுமதிக்கப்பட்டால் அது தவறான முன்உதாரணமாக அமைந்து விடும். அத்துடன் விளையாட வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு அது மோசமான செய்தியாகவும் இருக்கும். ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியை விட வலுகுறைவானதாக இருந்தாலும் அந்த அணிக்கு தகுந்த மரியாதை அளிக்க வேண்டும். அந்த நேரத்தில் விராட்கோலி கவுண்டி போட்டியில் விளையாட சென்றால் அது ஆப்கானிஸ்தான் அணியை அவமதிப்பது போல் அமையும். இது போட்டியை ஒளிபரப்பு செய்யும் நிறுவனத்துக்கும் இழப்பை ஏற்படுத்தும். கவுண்டி போட்டியில் விராட்கோலி விளையாடினாலும், உரிய அனுமதி பெற்று ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும். ஐ.பி.எல். போட்டியை தவிர்த்து அவர் கவுண்டி போட்டிக்கு செல்வாரா? என்றார்.
‘இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடருக்கு தயாராக 6 முதல் 7 வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டாலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வலுவான இந்திய அணி களம் காணும்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஷபிக் ஸ்டானிக்ஜாயிடம் கேட்ட போது, ‘இந்திய அணிக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். உலக கிரிக்கெட்டில் முத்திரை பதித்துள்ள விராட்கோலி எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட முடியாமல் போனால் அது எங்கள் வீரர்களுக்கு பெரிய ஏமாற்றமாக தான் இருக்கும்’ என்று கூறினார்.

Share this post:

Related Posts

Comments are closed.