”பயமா இருக்கு” திரை விமர்சனம்..

IMG_3419 037A4176காதல் திருமணம் செய்துக் கொண்ட கணவன், மனைவியான சந்தோஷ் பிரதாப்பும், ரேஷ்மி மேனனும் தனி வீட்டில் வசித்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரேஷ்மியின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவுவதற்காக இலங்கையில் உள்ள ரேஷ்மியின் தாயை அழைத்து வருவதற்காக சந்தோஷ் இலங்கை செல்கிறார். தமிழர்கள் பிரச்சினை காரணமாக 4 மாதங்கள் கழித்து சந்தோஷ் தமிழகம் திரும்ப நேரிடுகிறது.

இலங்கையில் நடந்த போரில் ரேஷ்மியின் அம்மா இறந்துவிட்டதாக தகவல் அறிந்து சந்தோஷ் மீண்டும் ஊர் திரும்புகின்ற நேரத்தில் இலங்கை வீரர்களிடம் துப்பாக்கி முனையில் சிக்கிக் கொண்ட ஜெகன், ராஜேந்திரன், லொள்ளு சபா ஜீவா, பரணி ஆகிய நான்கு பேரையும் காப்பாற்றி தன்னுடன் அழைத்து வருகிறார். நான்கு பேரையும் தனது வீட்டிற்கு அருகேயுள்ள உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் ஊருக்குள் செல்லும் சந்தோஷிடம், ரேஷ்மி மேனன் இறந்து விட்டதாக அந்த கிராமத்தில் உள்ள சிலர் கூறுகின்றனர்.

நால்வர்களில் மொட்டை ராஜேந்திரன் சந்தோஷின் மனைவி ரேஷ்மி மேனனை பேய் என்று சொல்கிறார். தனது கை குழந்தையுடன் சகஜமாக இருக்கும் ரேஷ்மி மேனன், குறித்து தனது நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் சொல்வதை சந்தோஷ் நம்பவில்லை. ஆனால் அவரை ரேஷ்மியிடம் இருந்து காப்பாற்றியாக வேண்டும், என்று அவரது நான்கு நண்பர்களும் முயற்சிக்கிறார்கள்.

சில கொடூரமான சத்தத்தை கேட்டு பயந்த மொட்டை ராஜேந்திரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பேய் ஓட்டுபவரான கோவை சரளாவிடம் செல்கின்றனர். அவர்களை காப்பாற்றுவதற்காக அங்கு வரும் கோவை சரளா, அங்கு பேய் இருப்பதை உறுதிப்படுத்துகிறார். யார் அந்த பேய்..அந்த பேயிடம் இருந்து சந்தோஷை காப்பாற்றினார்களா? அவனது மனைவி ரேஷ்மிதான் உண்மையான பேயா? என்பதுதான் ’பயமா இருக்கு’ படத்தின் கதை.

ரேஷ்மி மேனனின் கணவனாக வரும் சந்தோஷ் பிரதாப் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டு கணவன் இல்லாமல் அவதிப்படும் ரேஷ்மி மேனனின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. ஜெகன், லொல்லு சபா ஜீவா, பரணி என கூட்டாக காமெடிக்கு முயற்சி செய்திருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா தனது அனுபவ நடிப்பால் ரசிக்க வைக்கின்றனர்.

படம் ஆரம்பிக்கும்போதே பேய் படம் பயமாக இருக்கும் என்று நினைத்தால், எந்தக் காட்சியிலும் பயமே வரவில்லை. நம்மை நேசிக்கும் ஒருவர் உயிரோடு இல்லை என்றாலும் நம்மோடு இருக்கவே ஆசைப்படுவார் என்பதை இந்தக் கதையின் மூலம் சொல்ல முயற்சி செய்தாலும், சரியாக சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார் இயக்குநர் பி.ஜவகர். சி.சத்யாவின் இசையில் பாடல்கள் ஓரளவுக்கு பரவாயில்லை. மகேந்திரனின் ஒளிப்பதிவில் கேரளாவில் எடுத்த காட்சிகள் சிறப்பாக இருக்கிறது..

மொத்தத்தில் `பயமா இருக்கு’  பயமில்லாத பேய் படமாக இருக்கிறது..

ராதாபாண்டியன்

 

Share this post:

Related Posts

Comments are closed.