“சச்சின் டெண்டுல்கர் கையிலெடுத்திருப்பது கபடிக்கு கிடைத்த பெருமை” கமல்ஹாசன்..!

IMG_6945 1சச்சின் டெண்டுல்கர், சிரஞ்சீவி, ராம்சரண், அல்லு அரவிந்த்,  அல்லு அர்ஜுன் மற்றும் நிம்மகட பிரசாத் ஆகியோரை முதலாளிகளாகக் கொண்ட  தமிழ் தலைவாஸ் கபடி அணியின் விளம்பரத் தூதுவராக கமல்ஹாசன் இணைந்துள்ளார். இந்த தமிழ் தலைவாஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. ஜூலை 28 முதல் ஆரம்பிக்கவிருக்கும் இந்தியன் கபடி லீக்கின் ஐந்தாவது பதிப்பிற்கான தமிழ் தலைவாஸின் உடையை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.

தற்போது அதிமுக ஆட்சியில் உள்ள ஊழல்களைபற்றி அரசியல் கருத்துக்களால் தமிழ் மக்கள் மத்தியில் தலைவனாக வரக்கூடும் என்கிற நிலையில், கமல்ஹாசன், தமிழ் தலைவாஸ் நிகழ்ச்சியில் இணைந்தது பற்றி கூறுகையில், ”நமது முன்னோர்களின் வழிவந்த கபடி விளையாட்டில் இணைவதில் பெருமை கொள்கிறேன். தமிழ் தலைவாஸ் அணியுடன் இணைவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. என் அருமை தலைவாஸ்  அனைவர்  மனதிலும் பெருமை பொங்கும் விதமாகக்       கோட்டைத் தாண்டி புகழைச் சூடுவார்கள்.  எங்கோ ஒரு தீவில் உருவான விளையாட்டு உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது என்றால் நம் தேசத்தில் 4000 வருடத்திற்கும் மேலாக விளையாடப்பட்டு வரும் கபடியை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும். ஒருமையில் பேசுவது தான் நாகரீகம் என்று இங்கே சிலர் நினைத்துக் கொண்டிருக்கும் போது தமிழ் தலைவாஸ் என்று பன்மையில் வைத்திருக்கிறார்கள்.  அதுவே எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. போர்கள் நடைபெறாத காலங்களிலும் மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே கபடி முதலான விளையாட்டுகளை நம் முன்னோர் உருவாக்கியிருக்க வேண்டும். அலகு குத்துதல் கூட அப்படித்தான். ரத்தம் பார்த்து பயந்து விடக்கூடாது என்பதற்காக இருக்கலாம்” என்றார். நடிகனாக ஆன பிறகு தன்னை கபடி விளையாடத் தன் நண்பர்கள் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், இன்று அரசியல் சடுகுடு விளையாடக் களத்தில் இறங்குவாரா.. என்று தமிழகமே ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கூறும் போது, ”சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். 20 வருடங்களுக்கு முன் தான் ஹைதராபாத் சென்றேன்.. இங்கே தேனாம்பேட்டை கேசரி பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது 8 ஆம் வகுப்பில் கிரிக்கெட்டா..கபடியா என்கிற நிலையில் கபடியைத் தேர்வு செய்தேன். 12 ஆம் வகுப்பில் நான் தான் கபடி கேப்டன்..” என்றார்.

அல்லு அர்ஜுன் பேசும் போது, ” கமல்ஹாசன் இணைகிறார் எனும் போது தலைவா என்கிற வார்த்தை தான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து அதையே பெயராக வைத்திருக்கிறோம்..” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அனுபம் கோஸ்வாமி, ராம் சரண், நிம்மகட பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். மஹாபாரதத்தில் நடைபெற்ற குருஷேத்திரப் போரின் 13 ஆவது நாள் அர்ஜுனனின் மகன் அபிமன்யு சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்டு 6 மாவீரர்களை எதிர்த்துப் போரிட்டு  இறுதியாக துச்சாதனன் மகன் துர்முகனைக் கொன்று விட்டு  வீர மரணம் அடைந்ததன் நினைவாகக் கடந்த 4000 ஆண்டுகளாக நமது தேசத்தில் 7 பேர் கொண்ட இரு அணிகளுக்குள்  கபடி விளையாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Share this post:

Related Posts

Comments are closed.