கண்ணை திறந்து பார்க்கும் கருணாநிதி – வெளியான புகைப்படம்

31-karu-2
திமுக தலைவர் கருணாநிதி கண்ணை திறந்து பார்க்கும் புகைப்படம் வெளியாகி திமுக தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு கடந்த 4 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவரது உடல்நிலை மோசமடைந்தாலும், மருத்துவர்களின் சிகிச்சை காரணமாக அவர் உடல் நிலை சீரான நிலையில் இருந்து வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரலங்கள் பலரும் தினமும் மருத்துவமனை வந்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்து செல்கின்றனர். அந்நிலையில், கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கருணாநிதியை தீவிர சிகிச்சை பிரிவில் நேரில் சென்று பார்த்தேன். அவர் நன்றாக இருக்கிறார்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதற்கு முன் துணை ஜனாதிபதி வெங்கய நாயுடு கருணாநிதியை பார்த்த போது வெளியான புகைப்படத்தில் கருணாநிதியின் முகம் தெரியவில்லை. இது திமுக தொண்டர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது வெளியான புகைப்படத்தில் சிகிச்சை பெறும் கருணாநிதியின் முகம் தெளிவாக தெரிகிறது. ராகுல் வந்துள்ளார் என கருணாநிதியின் காதில் ஸ்டாலின் கூறும் புகைப்படமாகவும், அதை கருணாநிதி உணரமுடிகிற நிலையில் கருணாநிதி இருக்கிறார் என உறுதியாகும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. மேலும், செயற்கை சுவாசம் பொருத்தப்படாமல் கருணாநிதி இயற்கையாகவே சுவாசிப்பது தெரிகிறது. தங்களின் தலைவர் கருணாநிதி நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்கிற நம்பிக்கையை திமுக தொண்டர்களுக்கு இந்த புகைப்படம் கொடுத்துள்ளது. எனவே, சமூக வலைத்தளங்களில் திமுகவினர் இந்த புகைப்படத்தை மகிழ்ச்சியாக பரப்பி வருகின்றனர்.

Share this post:

Related Posts

Comments are closed.